அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘வெஞ்சென்ஸ்’. இந்த திரைப்படத்தில் அபர்ணதி, சச்சு, ஒய்.ஜி. மகேந்திரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை எம்.எஸ். பிரபு மேற்கொண்டுள்ளார். இசையை கார்த்திக் ராஜா மற்றும் அருண் ராஜ் இணைந்து அமைத்துள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் ராகுல் அசோக் கூறுகையில், “நான் எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. குறும்படங்களை இயக்கிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளேன். இது ‘வேணி’ என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. அவளின் சாதாரண வாழ்க்கை ஒரு கட்டத்தில் தொடங்கி எவ்வாறு மாறி வேறு திசையில் செல்கிறது என்பதையே படம் விவரிக்கிறது. இது 2002ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட அரசியல் கதை. முழுமையாக கற்பனையாக உருவாக்கப்பட்ட கதைதான்.
இக்கதையில் இடம்பெறும் சம்பவங்கள் நிஜ நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்படக்கூடாது என்பதற்காக, கற்பனையான ஒரு மாநிலத்தில் நடக்கும் கதையாக வடிவமைத்துள்ளோம். ‘வேணி’ கதாபாத்திரத்திற்கு அபர்ணதி மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். அவரது நடிப்பு பாராட்டைப் பெறும் என நம்புகிறேன். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதையின் முன்னேற்றத்தில் முக்கியத்துவம் உண்டு. திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. வரும் மார்ச் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் படம் அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.
