கடந்த வருடம் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் நடிக்கும் புதிய படங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த தகவலில், நான்கு வித்தியாசமான படங்களில் நடிக்க இருப்பதாக விக்ரம் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அந்த வரிசையில், மலையாள இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் வரலாற்று புனைவு வகையில் உருவான ‘அஜயன்டே ரெண்டாம் மோஷனம்’ திரைப்படத்தை இயக்கிய ஜிதின் லால் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. வித்தியாசமான கதைத் தேர்வுகளால் கவனம் பெற்ற ஜிதின் லால், விக்ரமுடன் இணைவது திரையுலகில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, விக்ரம் நடிப்பில் மலையாள இயக்குநர் ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்ற படம் உருவாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜிதின் லால் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் விக்ரமின் திரை பயணத்தில் ஒரு முக்கியமான படியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
