மணி ரத்னம் சாரும் நானும் இணையும் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்… அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘ட்ரெயின்’ திரைப்படத்திலும், இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கிய ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்திலும் நடித்துத் முடித்துள்ளார். மேலும் இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்குப் பிறகு அவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அதனை விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது: “நான் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு வெளியான ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் மணிசாருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்த முறை முற்றிலும் மாறுபட்ட முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது எனக்கு உயிரற்ற வாழ்க்கையைப் போன்றதாக தோன்றும். மறுபதிப்பு அல்லது தொடர்ச்சிப் படம் போன்றவற்றில் நான் ஈடுபட விரும்புவதில்லை. கலை மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது. அந்த உலகின் ஒரு சிறிய பகுதியே நான். எந்தவிதமான திட்டமிடப்பட்ட முறையையும் நான் பின்பற்றுவதில்லை. வாழ்க்கையில் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் நினைத்தாலும், உண்மையில் எதையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.

நான் எதையும் முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. என் நடிப்பும் ஓர் இயல்பான ஓட்டமாக செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். திரையில் வேறொருவராக மாறுவது எளிதான செயல் அல்ல. சிறிய கதாபாத்திரங்களைத் தேடி இந்தத் துறையில் நுழைந்த விஜய் சேதுபதி இன்னும் என்னுள் உயிருடன் இருக்கிறார். மணிரத்னத்துடன் பணியாற்றினாலும், அந்த எளிமையான மனநிலையை நான் காப்பாற்ற விரும்புகிறேன். நான் சினிமாவுக்கு வந்தபோது என்னுடைய ஆசை கேமரா முன் நின்று வசனங்களைப் பேசுவதுதான். இன்றும் கேமரா முன் நிற்கும் தருணங்களில் நான் மிகுந்த உயிரோட்டத்துடன் உணர்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading