நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் சகோதரரான அபர்ஷக்தி குரானா தற்போது இந்தி திரைப்படத் துறையில் முக்கியமான இளம் வில்லனாக கவனம் பெற்றுள்ளார். அவர் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தற்போதைய காலகட்டத்தையும், 1940களின் பின்னணியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அபர்ஷக்தி குரானா இரு காலகட்டங்களிலும் தோன்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் இதில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பவ்யா தாரிக்கா ஆசிரியையாக நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் சூர்ய பிரதாப் கூறுகையில், “இரண்டு காலகட்டங்களில் நகரும் கதை இது. தற்போதைய சூழலில் தொடங்கி, 1940களின் முக்கியமான நிகழ்வுகளை பின்னோக்கிக் காட்சிகளாக விவரிக்கிறது. கவுதம் இதில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துள்ளார். அதனால் அவர் சீருடையில் அல்லாமல் பொதுவான உடையிலேயே படம் முழுவதும் தோன்றுகிறார்.
தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கொலைகள் நடைபெறுகின்றன. அவை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் செயல் என்பதை கதாநாயகன் அறிகிறார். ஆனால் வில்லன் எந்த வெளிப்படையான அடையாளமும் இல்லாமல் யாராலும் எளிதில் பிடிக்க முடியாதவனாக இருக்கிறார். கதாநாயகன் வில்லனைத் தேடி செல்லும் போது நிகழும் அதிரடி சம்பவங்கள், வில்லனின் பின்னணி மர்மங்கள், கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை அனைத்தும் விறுவிறுப்பான திகில் அம்சங்களாக இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
