நடிகை கீதா கைலாசம் நடித்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றது. இந்த படத்தில் கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் அவர் மிகவும் இயல்பாகவும் வலுவாகவும் நடித்திருந்தார். அவரது நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
அவரது இந்த சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான ‘காய்ப்’ சினிமா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வினோத் ஜெயராமன் அவர்களுக்கு வழங்கினார். மேலும், ‘அங்கம்மாள்’ திரைப்படம் சிறந்த கதைக்கான விருதையும் பெற்றுள்ளது. அதேபோல், ‘நாங்கள்’ திரைப்படத்தில் நடித்த அப்துல் ரபேவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றதையடுத்து கீதா கைலாசம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது, “திரை உலகில் உள்ளவர்களுக்கு விருதுகள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகின்றன. கலைஞர்களுக்கு விருதுகள் ஒரு அடையாளமாக திகழ்கின்றன. அது நம்மை இன்னும் சிறப்பாக செயல்பட தூண்டும் சக்தியாக உள்ளது,” என்று தெரிவித்தார். இந்த விருது பட்டியலில் ‘ரெட்ரோ’, ‘பைசன்’, ‘காந்தா’, ‘நாங்கள்’, ‘பேட் கேர்ள்’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
