நடிகை சம்யுக்தா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “திரைப்படம் என்பது ஒரே ஒருவரின் பயணம் அல்ல; அதில் எண்ணற்ற மக்களின் பங்களிப்பு உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த சம்யுக்தா மேனன், ‘பாப்கார்ன்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், ‘தீவண்டி’ திரைப்படம் அவருக்கு நாயகி என்ற நிலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘களரி’, ‘எரிடா’, ‘வாத்தி’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் கவனம் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன், ஒரே நேரத்தில் பல மொழிகளில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் யோகேஷ் கேஎம்சி இயக்கத்தில் உருவாகி வந்த பான் இந்திய திரைப்படமான ‘தி பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சம்யுக்தா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “இரண்டு நாட்களுக்கு முன்பு ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. எனது மனம் நிறைவடைந்துள்ளது. சினிமா என்பது ஒரே ஒருவரின் பயணம் அல்ல; எண்ணற்ற கைகள், எண்ணற்ற இதயங்கள் மற்றும் பல துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவாகும் ஒன்றாகும்.
நாங்கள் இங்கு உருவாக்கியிருப்பது ஒருங்கிணைந்த முயற்சியின் ஆன்மாவாகும். இதற்காக நான் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள் நம்பிக்கையும் வழிகாட்டுதலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. மஞ்செரியல் பகுதியில் எங்களுக்கு பல சவால்கள் ஏற்பட்டன. 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருந்தாலும், படக்குழுவினர் உற்சாகத்துடன் பணியாற்றினர். இத்தகைய அர்ப்பணிப்பு அரிதானது. படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. முடியாததை கூட அவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
எனது தனிப்பட்ட குழுவினர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தனர். கடும் வெப்பத்தால் எனக்கு நீரிழப்பு ஏற்பட்டது, உடல் சோர்வடைந்தது. ஆனால் சரியான நேரத்தில் சரியான மனிதர்கள் என்னுடன் இருந்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த பதிவை எழுதும் தருணத்தில் நான் திருப்பதியில் இருக்கிறேன். என் மனதில் முழுவதும் நன்றியுணர்வு மட்டுமே நிறைந்துள்ளது. எனக்கு தேவையான நேரங்களில் மக்களிடமிருந்து நம்பிக்கையும் ஆதரவையும் பெற்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
