பாலிவுட் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கும் வித்யுத் ஜம்வால், தமிழிலும் ‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’, ‘மதராஸி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் அதிரடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா உள்ளிட்ட சர்வதேச நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். கேப்காம் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
களரி உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற வித்யுத் ஜம்வால், தனது அதிரடி காட்சிகளின் மூலம் தனித்துவமான ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் அவர் ‘தல்சிம்’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்துக்கான போஸ்டர் இணையத்தில் வெளியானதும் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலானது.
இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
