நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். டான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த இரண்டு முன்னணி நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் இணைவது திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க இருப்பதால் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார், இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து இயக்குநர் நெல்சனிடம் “இந்த படத்தில் ஹீரோ யார்?” என்று கேட்பது போன்ற சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
