இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விசாரணை’. இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும் அப்பாவி இளைஞர்கள் போலீசாரால் பொய்வழக்கில் சிக்கிக்கொள்ளுதல், பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வருதல், அதன்பிறகு அரசியல் சூழ்ச்சிகளால் அந்த இளைஞர்கள் போலீஸ் என்கவுண்டரில் பலியாகும் சம்பவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
‘விசாரணை’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படம் பல விருதுகளை வென்றது. குறிப்பாக, வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. மேலும், சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் இந்த படம் கைப்பற்றியது.
இந்நிலையில் ‘விசாரணை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசாரணை திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இதயங்களை வென்ற ஒரு திரைப்படம் இது. வொண்டர்பார் பில்ம்ஸ் மற்றும் க்ராஸ்ரூட் பில்ம் கம்பெனி தயாரித்த மிகச்சிறந்த படமாக இதை பெருமையுடன் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினரும் மீண்டும் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர்.
