நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சிகளால் புகழ்பெற்ற அவர், தற்போது குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அர்ஜூன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் ‘சீதா பயணம்’ திரைப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ஜூன், ‘ஏழுமலை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், முன்னதாக நான் 4 திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தற்போது அந்த வகை கதாபாத்திரத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். பலரும் என்னை எப்போதும் பார்த்தது போல வலுவான, நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். அதனால் இனிமேல் நான் ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். ‘ஏழுமலை’ இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இந்த படத்தின் கதை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. நான் திரையில் சாதாரணமாக தோன்ற விரும்பவில்லை. மக்கள் என்னைப் பார்க்க தியேட்டருக்கு வருவதால், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடினமாக உழைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
