நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதிகா இருவரும் 1980களில் வெளியான ‘ரங்கா’, ‘மூன்று முகம்’, ‘போக்கிரி ராஜா’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘ஊர் காவலன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். அந்த காலகட்டத்தில் இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ராதிகா அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினிகாந்துடன் இரவு நேரத்தில் பைக் ரைட் சென்ற அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் இரவில் ரஜினிகாந்த் தனது மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துச் சென்று சென்னை நகரின் பல பகுதிகளைச் சுற்றிக் காட்டினார். அந்த நேரத்தில், சினிமாவில் பெரிய பிரபலமாக மாறுவதற்கு முன்பு அவர் சந்தித்த கடினமான நாட்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார். நகரின் சில இடங்களை சுட்டிக்காட்டி, நான் இங்கே தான் தூங்குவேன், இந்த இடத்தில் தான் தங்கியிருந்தேன், இங்கு தான் சாப்பிடுவேன் என்று தனது பழைய வாழ்க்கை அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
பலரும் வாழ்க்கையில் போராடுகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் வலி, பொறுமை மற்றும் கடின உழைப்பின் மூலம் உண்மையாகவே அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து வந்தவர் என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு கார் அதிவேகமாக வந்து எங்கள் முன்னால் குறுக்கே நின்று வழிமறித்தது. ஒரு நிமிடம் நான் மிகவும் பயந்து போய்விட்டேன்.
அந்த காரில் இருந்து இறங்கியவர் வேறு யாருமில்லை, லதா ரஜினியின் சகோதரரும், இசையமைப்பாளர் அனிரூத்தின் தந்தையுமான ரவி ராகவேந்திரா. ரஜினிகாந்த் நள்ளிரவில் ஒரு பெண்ணுடன் ரகசியமாகச் செல்கிறார் என தவறாக புரிந்து கொண்டு, எங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர் துரத்தி வந்திருந்தார். ஆனால் லதாவிற்கு ஏற்கனவே நான் ரஜினியுடன் இருப்பது தெரிந்திருந்தது. இந்த விவரம் தெரியாமல் ரவி ராகவேந்திரா எங்களைத் துரத்தி வந்த சம்பவம் இன்று நினைத்தாலும் சுவாரஸ்யமாக இருக்கிறது என ராதிகா தெரிவித்துள்ளார்.
