தமிழ் திரையுலகில் நேரடியாக அறிமுகமாகும் முன்னரே, தமிழ் ரசிகர்களிடையே நல்ல அறிமுகமும் வரவேற்பும் பெற்ற நடிகராக மம்முட்டி இருந்து வந்தார். 1990ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் சம்மதம்’ திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தனது நடிப்பை தொடங்கினார். கடந்த 35 ஆண்டுகளில் மொத்தமாக 16 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், அதில் ‘அழகன்’, ‘தளபதி’, ‘மக்களாட்சி’, ‘அரசியல்’, ‘மறுமலர்ச்சி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ஆனந்தம்’, ‘பேரன்பு’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. மம்முட்டி கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ‘பேரன்பு’, இது 2019ஆம் ஆண்டு வெளியாகியது. அதன் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த சூழலில், ‘தனுஷ் 55’ என்ற படத்தில் மம்முட்டி நடிக்க உள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி கவனம் பெற்றது. அந்த கதாபாத்திரத்திற்கு மம்முட்டி மட்டுமே பொருத்தமானவர் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது, நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், மம்முட்டி இப்படத்தில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, மம்முட்டி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன்,” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு மறுபதிலாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “சார், இது நம்பவே முடியாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்புள்ள மம்முட்டி சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகப்பெரிய பெருமை,” என்று குறிப்பிட்டார். அதேபோல் படத்தின் நாயகன் தனுஷும், “இது ஒரு மிகப் பெரிய பாக்கியம் சார்,” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
