ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லீடர்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் முழு ஆக்ஷன் அவதாரத்தில் லெஜண்ட் சரவணன் களமிறங்கியுள்ள நிலையில், படத்தின் அறிமுக வீடியோவில் இடம்பெற்ற சண்டைக் காட்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து பேசும்போது சரவணன், “என்னுடைய வாழ்க்கையில் முதல் லீடர் என் அப்பா தான். நாளைய லீடர் யார் என்பதை சிறிது காலம் கழித்து சொல்கிறேன். இந்த படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. அங்கே இதே தலைப்பில் ஒரு படம் இருந்தாலும், முறையாக தலைப்பை பெற்றுவிட்டோம். இது ஆக்ஷன் படம் என்றாலும், அதில் எமோஷனல் கன்டென்ட் முக்கியமாக இருக்கும். படம் பார்க்கும் போது அந்த உணர்வு ரசிகர்களை தொட்டடையும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “லெஜண்ட் படத்தில் ஒரு விதமான கெட்டப் இருந்தது. இந்த படத்தில் தாடி, மீசையுடன் புதிய தோற்றத்தில் வருகிறேன். இது எனக்கு நன்றாக பொருந்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ ஒரு கதை, ‘லீடர்’ வேறு கதை. இந்த தலைப்பை முன்பே முடிவு செய்துவிட்டோம். நான் செய்யும் எந்த வேலையிலும் முழு முயற்சியுடன் இறங்குவேன். ஆரம்பத்தில் விமர்சனங்கள் வரும், வெற்றி கிடைத்த பிறகு அவை காணாமல் போய்விடும். நான் இலக்கை நோக்கி பயணிக்கிறேன். என்னை பற்றி மீம்கள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். அதை தவிர்க்க முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்,” என்றார்.
தொடர்ந்து அவர், “எனக்கு முதன்மையாக என் குடும்ப தொழில்தான் முக்கியம். சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்ததால் தான் இந்த துறைக்கு வந்தேன். இந்த படத்தை 97 நாட்களில் முடித்தோம். ஜார்ஜியா மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தில் சவாலான விஷயம் விடிவி கணேஷுடன் நடித்ததுதான். அது மறக்க முடியாத அனுபவம். என் நீண்டகால நண்பர் என்பதால் வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்ரமராஜாவை வைத்து இந்த கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “என் பெயர் சரவணன். கடைகளுக்கு ‘லெஜண்ட்’ என்ற பெயர் வந்ததால் லெஜண்ட் சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது. இனி ‘லீடர் சரவணன்’ என்று அழைக்க மாட்டார்கள். என் முதல் படம் நீரிழிவு நோய் மருந்து சம்பந்தப்பட்ட நல்ல கருத்தைக் கொண்டது. இந்த படத்திலும் ஒரு நல்ல கரு இருக்கிறது. படம் பார்த்தால் நேர்மறையான உணர்வு வரும். நான் தவறான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன். சினிமாவிலும் அதை செய்ய மாட்டேன். இந்த படத்தில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். முதல் படத்திற்கு பிறகு சில பெரிய இயக்குநர்களுடன் பேசினேன், ஆனால் அது செட் ஆகவில்லை. ஆர்.எஸ். செந்தில்குமார் என்னுடன் சரியாக இணைந்தார். இந்த படம் பாதியில் இருந்தபோதே அவரை அடுத்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்துவிட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
