மூன்று விதமான காதல் கதைகளை மையமாக வைத்து உருவான ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’

தெலுங்கு திரையுலகில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் த்ரிகுண், தமிழில் ‘தங்கமகன்’, ‘டெவில்’, ‘கடாவர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். தற்போது அவர் நடித்துள்ள முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’, பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை ரமேஷ் தயாரிப்பில், பல திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜசேகர்.ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா மற்றும் ராதா ஆகிய மூவர் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ், பிரபல தெலுங்கு நடிகர்கள் ஆலி மற்றும் ரகு பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அனுபவம் கொண்ட பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் விஜய ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கோலி சோடா’, ‘கடுகு’, ‘சண்டிவீரன்’ போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ராஜசேகர்.ஜி கூறுகையில், மூன்று விதமான காதல் கதைகளை மையமாக வைத்து, மூன்று கோணங்களில் நகரும் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கலாட்டா திரைப்படம்தான் இது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் டிரெண்டிங்கான படமாக இது இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். சென்னை, ஐதராபாத், கோவை, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading