தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த பழைய வெற்றிப் படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘அஞ்சான்’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த வரிசையில், நடிகர் சூர்யாவின் நடிப்பில் 24 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படமும் மீண்டும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த படம் வருகிற 13 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.
2002 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் திரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள், வெளியான காலம் முதல் இன்றுவரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
