நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியும், ‘பேட்ரியாட்’ திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதியும் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, மோகன்லாலின் 366-வது திரைப்படத்தை ‘தொடரும்’ படத்தை இயக்கிய இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்ததும், மோகன்லால் நடிக்க உள்ள அவரது 367-வது திரைப்படத்தை ‘மேப்படியான்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோகன்லால் மீண்டும் ஒரு முக்கியமான இயக்குநருடன் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தின் கதைக்களம் ராணுவ பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இயக்குநர் விஷ்ணு மோகன் விரிவான முன் கட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் குறித்து அவர் பேசுகையில், “இந்த படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், வழக்கமான ஒரு ராணுவ திரைப்படமாக இது இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
