சரவணன் இயக்கத்தில் சிம்பு, சனா கான், பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ‘சிலம்பாட்டம்’ திரைப்படம், புது பொலிவுடன் பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வெளியாகிறது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் டி. ராஜேந்தர் உரையாற்றியபோது, தான் பல காதல் திரைப்படங்களை வழங்கியிருந்தாலும், தன்னையே ஆச்சரியப்பட வைத்த காதல் படம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ என குறிப்பிட்டார். காதல் திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே மதிப்பும் வரவேற்பும் இருக்கும் என்றும், ரீ-ரிலீஸில் பழைய படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருப்பதை அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் நிரூபித்ததாகவும் தெரிவித்தார். அஜித்தின் ‘மங்காத்தா’ வெளியான நேரத்தில், அதற்கு முன் எந்த புதிய படங்களும் திரையரங்குகளில் நிலைக்கவில்லை என்றும், எந்த திரைப்படங்களும் வியாபாரம் ஆகவில்லை என்றும் அவர் கூறினார்.
என் மகனுக்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என உணர்ச்சிவசப்பட்ட டி. ராஜேந்தர், விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என்றால், தனது படத்தை ஒரு வருடம் கூட தள்ளிவைக்க தயங்கமாட்டேன் என தெரிவித்தார். இணையத்தில் முன்புபோல் பேச முடியவில்லை என சிலர் விமர்சிப்பதை குறிப்பிட்டு, “இதோ பாடுகிறேன்” என்று கூறிய அவர், மேடையில் ‘வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எம்மாடி ஆத்தாடி’ பாடலை பாடி பார்வையாளர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று சிம்புவின் பிறந்த நாள் என்பதால், சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் டி. ராஜேந்தர் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.
