கடந்த மாதம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் போராளி மாணவர் கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது உருவாகி வரும் ‘அட்ரஸ்’ என்ற புதிய படத்திலும், ‘காளி’ என்ற போராளி கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றமாகவும், சற்றே நீட்டிக்கப்பட்ட வேடத்திலும் அவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜமோகன் இயக்கும் இந்த திரைப்படத்தில், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இசக்கி பரத் மற்றும் பூஜா ஜவேரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம், பல ஆண்டுகளாக இரண்டு மாநிலங்களிலும் இணைக்கப்படாமல் ‘அட்ரஸ்’ இல்லாமல் தவித்து வந்த கதையையும், அந்த மக்களால் அனுபவிக்கப்பட்ட துயரங்களையும் மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களது கிராமத்தை ஒரு மாநிலத்துடன் இணைக்க போராடும் போராளியாக அதர்வா நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
