ஒரு பெண்ணின் மரியாதையை குலைத்துவிட்டால் அவளது வாழ்க்கை முடிந்துவிடும் என்று சிலர் நினைக்கின்றனர் – நடிகை சாய் தன்ஷிகா டாக்!

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், சாய் தன்ஷிகா, சாயாஜி ஷிண்டே, கபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யோகிடா’. இந்த படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது, ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கடுமையாக உழைத்தேன் என்று பெருமையாக பேச விரும்பவில்லை என்றும், பேசுவதைக் காட்டிலும் செயலில் காட்ட வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், ஒரு பெண்ணின் மரியாதையை குலைத்துவிட்டால் அவளது வாழ்க்கை முடிந்துவிடும் என்று சிலர் நினைப்பதாகவும், ஆனால் அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். வாழ்க்கையில் எது நடந்தாலும், அதிலிருந்து தைரியமாக மீண்டு வர வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என அவர் விளக்கினார்.

இந்த படத்தில், ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் அணிந்திருந்த கெட்டப்பில் தான் நடித்துள்ளதாகவும், அந்த படத்தில் யோகி என்ற தனது கதாபாத்திரமும், அந்த தோற்றமும் பெரிதும் பேசப்பட்டதாகவும் கூறினார். மலேசியாவில் அந்த கெட்டப்பை பார்த்து பல பெண்கள் அதேபோல் முடியை வெட்டிக் கொண்டது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். ‘பேராண்மை’ படத்தின் காலத்தில் பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை பயிற்சி கற்றுக்கொண்டது, ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவியதாகவும், அதன் பலன் இன்றும் தொடர்வதாகவும் தன்ஷிகா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தன்ஷிகாவிடம் அவரது திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் வெட்கத்துடன் நழுவி சென்றார். நடிகர் விஷாலுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும், நடிகர் சங்கக் கட்டிடம் முடிந்த பிறகு அங்கேயே திருமணம் நடைபெறும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் அந்த கட்டிடம் முடிவடையாததால் திருமணம் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading