2004ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்த படம் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தெலுங்கில் ‘7ஜி பிருந்தாவன் காலனி’ என்ற பெயரிலும் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார்.
இந்த வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக, கடந்த சில ஆண்டுகளாக ‘7ஜி ரெயின்போ காலனி 2’ திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் செல்வராகவன் இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே மீண்டும் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வருகிறார்.
தற்போது ‘வித் லவ்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அனஸ்வரா ராஜனிடம் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது என்றும், இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே உருவாகி வருகிறது என்றும் தெரிவித்தார். ‘7ஜி ரெயின்போ காலனி’ முதல் பாகம் வெளியான போது தன்னுக்கு வெறும் 2 வயதுதான் என்றும், பின்னர் வளர்ந்த பிறகு அந்த படத்தை பார்த்தபோது மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார். தற்போது எங்கு சென்றாலும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ எப்போது வெளியாகும் என்று அனைவரும் கேட்பதாகவும், தானும் இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார்.
