நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் திரைப்படங்களில் இருந்து வெளியிடப்பட்ட சிறப்பு போஸ்டர்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. அந்த வரிசையில், ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் போஸ்டர் அதிகம் பேசப்பட்டதுடன், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
அந்த போஸ்டரில், ஸ்ருதிஹாசன் சிகரெட் பிடித்தபடி ஸ்டைலான தோற்றத்தில் காணப்பட்டார். பவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் இந்த படத்தில், சாத்விகா கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசனுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை அவர் வில்லி வேடத்தில் நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட போஸ்டரை படக்குழு வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் உருவாகும் இந்த திரைப்படம், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
