பாலிவுட்டில் நடித்து முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளுக்கு இடையிலும் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
டோலிவுட் இயக்குநர் ரவி பாபு இயக்கத்தில் கங்கனா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஸ்கேரி பிக்சர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஃபிளையிங் ஃபாக்ஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் ரவி பாபுவே இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் தலைப்புடன் கூடிய அறிவிப்பு வீடியோவை நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கொடுங்கனவு விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் ராணா டகுபதியின் தந்தையான சுரேஷ் பாபுவும் இணைந்துள்ளார். இதன் காரணமாகவே ராணா படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த கங்கனா ரணாவத், “பயமாக இருக்கும். ஆனால், சுவாரசியமாகவும் இருக்கும்” என்று படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
