‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா மேனனுக்கு, அடுத்தடுத்து வெவ்வேறு மொழிப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்போது முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் ஜோடியாக ‘இருளன்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் கவுரி சங்கர் இயக்கத்தில் ருஷ்யா தத்தா கதாநாயகனாக நடிக்கும் ‘டான் போஸ்கோ’ படத்திலும் மிர்னா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் தனது கதாபாத்திரத் தேர்வு பற்றிப் பேசிய மிர்னா, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இதுவரை அதிகமாக அழுத்தமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளதாகக் கூறினார். இதிலிருந்து மாறுபட்டு, ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் விருப்பமாக இருந்ததாகவும், அந்த ஆசையை ‘டான் போஸ்கோ’ நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘ஜெயிலர்’ படங்களின் மூலம் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததைத் தனது கனவு நனவான தருணமாகக் குறிப்பிட்டார். சிறுவயதில் வாழ்க்கையில் அடைய விரும்பும் இலக்குகளை ஒரு புத்தகத்தில் எழுதி வைக்கும் வழக்கம் தனக்கு இருந்ததாகவும், அதில் ரஜினி, நாகார்ஜுனா, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்று பதிவு செய்திருந்ததாகவும் கூறினார். அந்த விருப்பங்கள் அனைத்தும் குறுகிய காலத்திலேயே நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காகப் பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் மிர்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
