கடந்த ஆண்டு சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துத் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது ‘வித் லவ்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை மதன் இயக்கியுள்ள நிலையில், கதாநாயகியாக மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ‘வித் லவ்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அபிஷன் ஜீவிந்த், “வித் லவ் படத்தின் இயக்குநர் மதன், நான் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த காலத்திலேயே இந்த கதையை என்னிடம் கூறினார். கதையை கேட்டபோது அதில் காதல், நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்து அம்சங்களும் இருந்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்த படத்திற்கு பல்வேறு தலைப்புகளை யோசித்தோம். ஆனால் முழுப் படத்தையும் பார்த்தபோது அது ஒரு காதல் கடிதம் போல உணர்வை ஏற்படுத்தியதால், ‘வித் லவ்’ என்ற தலைப்பை தேர்வு செய்தோம்” என கூறினார்.
டீசர் வெளியான பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்தது குறித்துப் பேசிய அபிஷன் ஜீவிந்த், “முதல் படமாக இயக்குநராக அறிமுகமாகி, அடுத்ததாக நடிகராக நடித்துள்ளோம் என்பதுபோன்ற சில ஒற்றுமைகள் காரணமாக அப்படிப் பேசுகிறார்கள். ஆனால் முழுப் படத்தையும் பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
