இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘லாக்டவுன்’ திரைப்படம், வரும் ஜனவரி 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்ப, கொரோனா லாக்டவுன் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்த கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கதையின் போக்கில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாக அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பம் அடைகிறார்.
அந்த கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுக்கிறார். ஆனால் அதே நேரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. இதனால், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையும், மருத்துவர்களை சந்திக்க முடியாத சூழலும் உருவாகிறது. இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் அவர் எடுக்கும் முடிவுகள் என்ன, அந்த கர்ப்பத்திற்கு காரணமான நபர் யார் என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு கதைக்களம் நகர்கிறது.
மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இருப்பதாகவும், இதில் தனிப்பட்ட ஹீரோ கதாபாத்திரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
