சென்னையில் நடைபெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், சீனாவில் தற்போது இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் கொண்ட மினி சீரிஸ் வடிவங்கள் அறிமுகமாகி வருவதாக தெரிவித்தார். இத்தகைய குறும்படத் தொடர்கள் எதிர்காலத்தில் பல நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போது நாம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் நீளமான திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் வருங்காலத்தில் இவ்வளவு நீளமான திரைப்படங்கள் உருவாகாது , அப்படி உருவாகும் வாய்ப்பு குறைவு தான்.என்றும், சினிமாவின் வடிவமே மாறிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இப்போது வெளியாகும் பல திரைப்படங்களில் பாடல்கள் இடம்பெறுவதில்லை என்றும், பாடல்கள் தனியாக ஆல்பமாக வெளியிடப்படும் சூழல் உருவாகி வருகிறது என்றும் கூறினார். இதன் தொடர்ச்சியாக, எதிர்காலத்தில் இசைக்கென தனியான இசை வங்கி போன்ற அமைப்புகளும் உருவாகும் என அவர் கருத்து தெரிவித்தார். மொத்தத்தில் சினிமா துறை வேகமாக மாற்றமடைந்து வருவதாக ரவிவர்மன் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இதே விழாவில் பேசிய மறைந்த இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல எடிட்டருமான லெனின், என் பேத்திகளுக்கே பீம்சிங் யார் என்பது தெரியவில்லை” என்று கூறியது நிகழ்வில் கலந்துகொண்டவர்களை ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து பேசிய பிரபல இயக்குநர் ஞானராஜசேகரன், “மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில்தான் புதிய முகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. புதுமையான முயற்சிகளுக்கும் தமிழ் சினிமாவில் அதிக ஆதரவு கிடைக்கிறது” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்ட பல கருத்துகள் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
