சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மவுனப் படங்களாகத் தொடங்கிய சினிமா, காலப்போக்கில் வசனங்களுடன் கூடிய பேசும் படங்களாக மாறியது. அதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிகளை கடந்து, இன்று ஒலி மற்றும் ஒளி அமைப்புகளில் பல புதுமைகளுடன் சினிமா செயல்பட்டு வருகிறது. காலம் செல்லச் செல்ல, எதிர்காலத்தில் இன்னும் அதிகமான வளர்ச்சிகளையும், புதிய வடிவங்களையும் சினிமா அடையும் வாய்ப்பு உள்ளது.
மவுனப் பட காலத்திற்குப் பிறகு பேசும் படங்களே பிரதானமாக தொடர்ந்தாலும், சில அபூர்வ முயற்சிகளாக மீண்டும் மவுனப் படங்களும் உருவாக்கப்பட்டன. இன்றைய தலைமுறைக்கு, 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் அமலா நடிப்பில் வெளியான ‘பேசும் படம்’ என்ற மவுனப் படம் குறித்து ஓரளவு தெரிந்திருக்கலாம். அதனைத் தொடர்ந்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘மெர்க்குரி’ என்ற மவுனப் படம் வெளியானது.
அதன் பின்னர், அரவிந்த்சாமி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. சில தாமதங்களுக்குப் பிறகு, இந்த படம் நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடித்த ‘பேசும் படம்’ வெளியான போது அது மிகவும் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘மெர்க்குரி’ படம் பெரிதாக பேசப்படாமல் போனது குறிப்பிடத்தக்கது.
