நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து ஆழமான தடங்களை பதித்தவர். அவரது இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பா. பாண்டி’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
அந்த வெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் காலமாக இயக்கத்தை ஒதுக்கி வைத்து, நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். இந்த இடைவெளிக்குப் பின்னர், ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ உள்ளிட்ட படங்களை அவர் இயக்கினார். அதே நேரத்தில் நடிப்பிலும் கடந்த ஆண்டு ‘குபேரா’, ‘தேரே இஷ்க் மெய்ன்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, தனது நடிகர் பயணத்தையும் வலுவாகத் தொடர்ந்தார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா, கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய திரைப்படத்தை தனுஷே தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுவதால், இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
