நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், முதல் முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்து ‘யூத்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பள்ளி பருவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கென் கருணாஸுடன் இணைந்து நடிகர் சுராஜ் வெஞ்ஜரமூடு மற்றும் நடிகை தேவதர்ஷினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்வத்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சமீபத்தில் கென் கருணாஸ் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பத்தில் இல்லை. ‘வாடா ராசா’ என்ற ஆல்பம் பாடலை வெளியிடுவதற்காக நான் தனுஷ் சாரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் ‘என்ன பண்ணிட்டு இருக்க?’ என்று கேட்டார்.
அதற்கு ‘சும்மாதான் சார் இருக்கேன்’ என்று சொன்னேன். உடனே அவர் ‘டைரக்ஷன் கத்துக்கோ, என் படங்களில் உதவி இயக்குநராக வேலை பண்ணு’ என்று சொல்லி, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’, ‘ராயன்’ ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். ‘ராயன்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் நான் எழுதிய கதையே இந்த ‘யூத்’ படம்” என்று தெரிவித்துள்ளார்.
