“குடி வந்தால் குடும்பம் வெளியே போய்விடும்”.. ‘ஆகாயம்’ படம் குறித்து இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் பேட்டி!

“அன்புக்கு முன்னால் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. அளவில்லா பேரன்பை பேசும் கதையாக இருப்பதால் தான் இந்தப் படத்துக்கு ‘ஆகாயம்’ என்று பெயர் வைத்தோம்” என்று தனது புதிய படத்தைப் பற்றி பேசுகிறார் இயக்குநர் தினந்தோறும் நாகராஜ். ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் ஆலிஷா மிராணி நடித்துள்ள இந்தப் படத்தை டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

படம் அன்பை மட்டும் பேசுகிறதா என்ற கேள்விக்கு, “இது அன்பை மட்டுமல்ல, அடையாளமில்லாத ஒரு மனிதனின் வாழ்க்கையையும் பேசுகிறது. ஆதார், பான், ரேஷன் என எந்த அட்டையும் இல்லாமல் வாழும் ‘குட்டி’ என்ற மனிதன் கதையின் மையம். நேர்மையான அவன், மது பழக்கத்தில் சிக்கிக் கொள்கிறான். காதலும் அவன் வாழ்க்கையில் வருகிறது. ஆனால் ‘குடி உள்ளே வந்தால் குடும்பம் வெளியே போய்விடும்’ என்ற உண்மையை படம் பேசுகிறது” என்று கூறினார். இது முழுக்க கற்பனை அல்ல என்றும், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை சமூக உண்மைகளுடன் இணைத்து கதையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் காதல், உறவுகள், தனிமை, இழப்பு ஆகியவை ஒன்றாக கலந்துள்ளதாகவும் கூறினார்.

“குடி எதிர்ப்பு மெசேஜ் சொல்லும் படம் அல்ல. ஆனால் ஒரு மனிதன் சரியாக வாழும்போது கிடைத்திருக்கக்கூடிய பல விஷயங்களை, மது எப்படி அவனிடமிருந்து பறித்துக் கொள்கிறது என்பதையே காட்டுகிறோம். அதை பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.படத்தின் முக்கிய நடிகர்களுக்கு முன்கூட்டியே திரைக்கதை கொடுத்து, குரல் மாடுலேஷன் முதல் உடல் மொழிவரை பயிற்சி அளித்ததாகவும் அவர் கூறினார். “அவர்கள் நடித்தது போல அல்ல, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள்” என்றார்.

பெரிய நட்சத்திரங்களை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, “ஒரு காலத்தில் சூர்யா சாரை சந்தித்திருக்கிறேன்; அஜித் சார் கூட என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அப்போது நான் என்னை அந்த அளவுக்கு தயாராக உணரவில்லை. இன்று நான் தெளிவாக இருக்கிறேன். நல்ல படங்கள், மக்கள் ரசிக்கும் படங்கள் எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று மனம் திறந்தார். ‘மத்தாப்பு’ படத்திற்குப் பிறகு ஏற்பட்ட நீண்ட இடைவெளி குறித்து பேசும்போது, “எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எப்படி எடுக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தது. அதனால் தான் இந்த இடைவெளி” என்று விளக்கினார். இறுதியாக, “இது சினிமா பார்க்கும் அனுபவம் மாதிரி இருக்காது; யாரோ ஒருவரின் வாழ்க்கையை நாமே அருகில் நின்று பார்க்கும் அனுபவமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading