மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேட்ரியாட்’. இந்த படம், இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள 8வது திரைப்படம் என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி. அனில் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக ‘பேட்ரியாட்’ உருவாகியிருப்பது டீசர் மூலம் தெரிய வந்தது.
சுமார் 130 நாட்களாக தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பதால், இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே, நயன்தாரா, மம்முட்டி மற்றும் பகத் பாசில் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘பேட்ரியாட்’ படத்தின் இந்த போஸ்டர்களில், மோர்ஸ் கோட் வடிவில் ஏப்ரல் 23 என்ற தேதியை குறிப்பிட்டு, வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
