பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். ‘அட்டகத்தி’ திரைப்படம் பெற்ற பிரமாண்ட வெற்றியின் காரணமாக, தினேஷ் என்ற பெயருக்கு முன்பாக அந்த படத்தின் பெயரே இணைக்கப்பட்டு அவர் ‘அட்டகத்தி தினேஷ்’ என அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ‘விசாரணை’, ‘குக்கூ’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருடன் போலீஸ்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ், சமீபத்தில் வெளியான மற்றும் நல்ல வரவேற்பை பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தினேஷ் தற்போது இயக்குநர் முரளி கிருஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு பல்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகைகள் ரேஷ்மா மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் வருகிற 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் வெளியாகியதன் மூலம், ‘கருப்பு பல்சர்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
