சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற Loyola Alumni Day 2026 நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தாம் படித்த கல்லூரியில் மீண்டும் கலந்துகொண்ட சூர்யா, பழைய நினைவுகளை பகிர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
“என் அன்பான லயோலைட்ஸ் குடும்பத்தினரே… இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நான் 1992 பேட்ச் மாணவன். 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இந்த வளாகத்துக்குள் வரும்போது நான் மீண்டும் ஒரு மாணவனாகவே உணர்கிறேன்” என்று அவர் தொடங்கினார்.
லயோலா கல்லூரி தமக்கு கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் கொடுத்ததாக சூர்யா கூறினார். “பி.காம் படிக்க வந்த முதல் நாளில் பல்வேறு பின்னணியில் இருந்த மாணவர்களைப் பார்த்து எனக்கு பயமாக இருந்தது. ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியேறும் போது, வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேன் என்ற நம்பிக்கையுடன் வெளியேறினேன்” என்றார்.
மேலும், “இங்கு நான் பட்டம் மட்டும் பெறவில்லை; ஒரு மனிதராக உருவானேன். யாராவது என்னிடம் என்ன படித்தீர்கள் என்று கேட்டால், நான் ‘பி.காம்’ என்று மட்டும் சொல்ல மாட்டேன். ‘பி.காம் லயோலைட்’ என்று பெருமையாகச் சொல்வேன். அந்த வார்த்தைக்கே ஒரு மரியாதை இருக்கிறது” என்று தெரிவித்தார். லயோலாவின் பல இடங்கள் இன்னும் மனதில் நிற்பதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். “கேன்டீன், மரத்தடி, சர்ச், கால்பந்து மைதானம், பி.காம் துறை கட்டிடம் – இவை அனைத்தும் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை” என்றார்.
தனக்கு லயோலா சேர்க்கை விண்ணப்பத்தை வாங்கிக் கொடுத்தவர் ராஜ்குமார் என்றும், அவர் பின்னர் அகரம் அறக்கட்டளைக்கும் பல உதவிகள் செய்ததாகவும் சூர்யா நன்றியுடன் குறிப்பிட்டார்.இறுதியாக, “இங்கு படித்தவர்களையும், இனி படிக்க வருபவர்களையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். உங்களுக்காக நான் எப்போதும் இருப்பேன். எங்கு சென்றாலும் ‘நான் லயோலைட்’ என்று பெருமையாகச் சொல்லுங்கள்” என்று அவர் மாணவர்களிடம் கூறினார். இந்த நிகழ்ச்சியில், திரையுலகிலும் சமூகப்பணிகளிலும் அவர் செய்த பங்களிப்புகளை பாராட்டி, சூர்யாவுக்கு “Creative Excellence Award” விருது வழங்கப்பட்டது.
