நகுல், பாக்யராஜ், நீது சந்திரா மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடித்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பிரம்மா.காம்’ திரைப்படத்தை இயக்கிய விஜயகுமாரன், தற்போது ‘க்ராணி’ (Granny) என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, ‘விஜயா மேரி யுனிவர்சல் மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்துள்ளார். இப்படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், ‘க்ராணி’ திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இப்படம் வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
