‘தடயம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும், சமூக பார்வை கொண்ட கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதற்காக பெயர் பெற்ற நடிகர் சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தின் மூலம் ஒரு முக்கியமான படைப்புடன் ரசிகர்களை சந்திக்க உள்ளார். ‘தடயம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம், விரைவில் ZEE5 தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தடயம்’ திரைப்படம், சமுத்திரகனியின் வலுவான மற்றும் தீவிரமான நடிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் சமுத்திரகனி இயக்கி, நடித்த ‘விநோதய சித்தம்’ திரைப்படம் ZEE5-ல் வெளியான போது, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ‘தடயம்’ திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கதையின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையிலும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர், இந்த படம் காவல்துறை பின்னணியில் உருவாகும் ஒரு அழுத்தமான திரில்லர் கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
