‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் வழக்கில் தீர்ப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், அந்த படத்தை மறுஆய்வுக்கு அனுப்ப பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து, படத்தை தயாரித்துள்ள கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், மறுஆய்வு பரிந்துரையையும் ரத்து செய்தார்.

இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் சென்னை ஐகோர்ட்டில் உடனடியாக மேல்முறையீடு செய்தது. மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடையும் பெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மத்திய தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை காலத்தில், தணிக்கை வாரியத்துக்கு பதில் மனு தாக்கல் செய்யக்கூட தனி நீதிபதி போதிய அவகாசம் வழங்கவில்லை என வாதிட்டார். மேலும், மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட உத்தரவை எதிர்த்து படக்குழு தனியாக வழக்கு தொடராத நிலையில், அந்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதாகவும், படக்குழு கேட்காத பரிகாரத்தை நீதிபதி வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

மேலும், மறுஆய்வுக்கு அனுப்புவது என்பது ஒரு இடைக்கால முடிவே தவிர நிரந்தர முடிவு அல்ல என்றும், ஆய்வுக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்திருந்தாலும், தணிக்கை உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் மறுஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்றும், இதில் எந்த விதமான தவறும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்து, பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், தணிக்கை குழு படத்தை பார்த்து சில காட்சிகளை நீக்கும்படி கூறியதையும், அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அவற்றை அடிப்படையாகக் கொண்டு புகார் அளிப்பது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பினார். ஆலோசனைக் குழுவில் இருந்த உறுப்பினர், தணிக்கை சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்யலாமே தவிர, சான்றிதழ் வழங்கக்கூடாது என புகார் அளிக்க முடியாது என்றும் வாதிட்டார்.

மேலும், தணிக்கை வாரியத் தலைவர் இறுதி முடிவை எடுக்காத நிலையில் படத்தை மறுஆய்வுக்கு அனுப்பியதால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது என்றும், தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய மறுநிமிடமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது என்றும், எங்களுக்கும் போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாததால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தையும் முடித்து ஒரே நாளில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். இயற்கை நீதியை பின்பற்றியே எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும் என்றும் கூறிய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading