தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தனுஷ், ‘இட்லி கடை’ மற்றும் ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, போர் பின்னணியிலான படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான ‘கர’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்துத் தன் பணியை முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த திரைப்படம், இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், ‘அமரன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டு, அதற்கான பூஜை புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கின. ஆனால், பட்ஜெட் தொடர்பான காரணங்களால் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இதன் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘தனுஷ் 55’ என அழைக்கப்படும் இந்தப் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
