இந்தியத் திரையுலகில் தனித்துவமான நடை, ஸ்டைல் மற்றும் ரசிகர் வட்டத்துடன் முன்னணி நடிகராக விளங்குபவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், 1980-களில் ஹிந்தி சினிமாவிலும் தொடர்ந்து நடித்து தனித்த இடத்தைப் பிடித்தார். அந்த காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ஹம் மே ஷஹென்ஷா கோன்’ என்ற திரைப்படம் குறிப்பிடத்தக்கது. நடிகை ரீனா ராயின் சகோதரர் ராஜா ராய் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை ஹர்மேஷ் மல்கோத்ரா இயக்க, லட்சுமிகாந்த் – பியாரிலால் இசையமைத்திருந்தனர். ரஜினிகாந்துடன் இணைந்து சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் புரி, ஜெகதீப் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். 35 எம்எம் ஈஸ்ட்மென் கலரில் முழுமையாக படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தபோதும், தணிக்கை செய்யப்படாமல், வெளியீட்டு அறிவிப்பின்றி தள்ளி வைக்கப்பட்டது.
இதற்குப் பின்னணி காரணங்களாக பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்தன. படத்தின் தயாரிப்பாளர் லண்டனுக்கு சென்ற நிலையில், அவரது மகன் மரணம் அடைந்தார். அதன் பின்னர், படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்கோத்ராவும் காலமானார். இவ்வாறு தொடர்ச்சியான சம்பவங்கள் காரணமாக, இந்த திரைப்படத்தின் வெளியீடு பல ஆண்டுகளாக நடைபெறாமல் முடங்கியது. எனினும், படத்தின் இணை தயாரிப்பாளர்களான அஸ்லம் மிர்சா மற்றும் ஷபானா மிர்சா ஆகியோர், இந்த திரைப்படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்ற முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். தற்போது, அந்த முயற்சிகள் வெற்றியை கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி, இந்த திரைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீள்பதிவு செய்து, 4K தரத்தில் காட்சித் தெளிவுடன், 5.1 ஒலி வடிவில் மாற்றி, 37 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய் கூறியதாவது, “இந்தத் திரைப்படத்திற்காக எங்களுடைய நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்கவில்லை. இந்த படம் துயரங்கள், பின்னடைவுகள் மற்றும் நீண்ட கால அமைதியை கடந்து வந்துள்ளது. இன்று, இது இறுதியாக அதன் பார்வையாளர்களைச் சந்திக்க இருக்கிறது என்பதில் நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன். அனைத்து சவால்களையும் எதிர்த்து இந்தத் திரைப்படம் உயிர் பிழைத்துள்ளது. அதன் வெளியீடு, விதி நிறைவேறுவது போன்ற உணர்வை அளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தின் வெளியீட்டிற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களிடமிருந்து ‘என்ஓசி’ பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு குறித்து நடிகர் ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவரை நேரில் சந்தித்து படத்தின் புரமோஷனில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இணை தயாரிப்பாளர் அஸ்லம் மிர்சா தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகின் முக்கியமான கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றிய இந்த திரைப்படத்தை, வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். பல தசாப்தங்களாக முடங்கிக் கிடந்த ஒரு திரைப்படம் இப்போது திரைக்கு வருவது, இந்தியத் திரையுலகில் ஒரு அபூர்வமான ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
