‘ஹபீபி’ திரைப்படம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு… இயக்குனர் மாரி செல்வராஜ் புகழாரம்!

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் பானுரேகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் ஹபீபி திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “அன்பிற்குரிய அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹபீபி திரைப்படத்தை பார்த்தேன். நம்மோடு, நமது மண்ணில், நமது வாழ்வியலுக்குள் இயல்பாக இருந்த தமிழ் இஸ்லாமிய வாழ்க்கையை மிகவும் நேர்த்தியாகவும், நெருக்கமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த முதல் திரைப்படமாக இது அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவாக இருந்த அசல் இஸ்லாமிய சினிமா என்ற பெரும் கனவை இயக்குநர் மீரா கதிரவன் நிறைவேற்றியுள்ளார். காலத்திற்கும் நினைவில் நிலைத்திருக்கும் ஒரு படைப்பை அவர் உருவாக்கியிருக்கிறார். அவருக்கும், படக்குழுவினருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும். ஹபீபி திரைப்படம் நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு” என்று பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த பாராட்டு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது. அதே நேரத்தில், ஹபீபி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading