2017 ஆம் ஆண்டில் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படமாக வெளியானது ‘மீசைய முறுக்கு’. இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஹிப் ஹாப் ஆதி இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீசைய முறுக்கு’ திரைப்படம், ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, வெளியான போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த நிலையில், ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடைபெற்று வந்துள்ளது. முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்த இரண்டாம் பாகத்தையும் ஹிப் ஹாப் ஆதி தானே தயாரித்து வருகிறார். இதனால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, நேற்று மலேசியாவில் நடைபெற்ற தனது மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சியின் போது ஹிப் ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். அதில், இந்த திரைப்படத்தில் பிரபல யூடியூபராகவும், ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவருமான குட்டி டிராகன் ஹர்ஷத் கான், ஹிப் ஹாப் ஆதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
