தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வெற்றி பெற்ற திரைப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜயின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ‘அஞ்சான்’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
இந்த வரிசையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ திரைப்படமும் மீண்டும் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், காதல் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2002-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
