விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ மற்றும் ஆர்.கே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் மீனாட்சி சவுத்ரி. இதன் மூலம் அவர் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதே சமயம், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வரும் மீனாட்சி சவுத்ரி, தற்போது பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது தோல் நிறம் காரணமாக இளம்பருவத்தில் சந்தித்த மன அழுத்தங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார். அதில், அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், அங்கு தனது நிறம் மற்றும் அழகு குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டதாகவும் கூறினார். உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று கூறி கிண்டல் செய்ததுடன், பலவிதமான வார்த்தைகளால் தன்னை அவமதித்ததாகவும் தெரிவித்தார். இத்தகைய விமர்சனங்கள் மனதளவில் தன்னை கடுமையாக பாதித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த அனுபவங்களே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கியதாக கூறிய அவர், முதலில் டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்ததாக தெரிவித்தார். தன்னை அழகாகவும் திறமையாகவும் இருப்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் கூறினார். இதற்காக குடும்பத்தினர் முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். வெற்றியை கொண்டாட கிராமத்திற்கு சென்ற போது, பழமைவாத சிந்தனையுடன் இருந்த சிலர் தன்னை விமர்சித்ததாகவும், பிகினி அணிவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று குற்றம்சாட்டியதாக கூறினார். ஆனால் காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அதே கிராம மக்கள் தன்னை மதித்து வரவேற்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
