நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பிறகு, இந்த திரைப்படம் வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது முந்தைய சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றும், அதனைச் சுற்றி பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன என்றும் கூறினார். இருப்பினும், நான் எங்கும் காணாமல் போகவில்லை. இன்னும் இங்கேயே தான் இருக்கிறேன். இன்று திரையுலகில் எனக்கு எந்தக் கடனும் இல்லை என்ற நிலைமையில் இருக்கும் ஒரு தயாரிப்பாளராக தான் இருக்கிறேன்” என்று தெளிவாக குறிப்பிட்டார். மேலும், ஒருவர் நல்ல மனிதர் என்றாலும் கடனில் இருக்கிறார் என்று பரிதாபமாக பேசுபவர்கள், நேரடியாக அவர் கடனில் இருக்கிறார் என்று கூறுபவர்களைவிட அதிகமாக ஆபத்தானவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்பின், தன் வாழ்க்கையில் முக்கியமான ஐந்து பேருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறிய ஞானவேல் ராஜா, அதில் முதன்மையானவர் நடிகர் சூர்யா என்றும் குறிப்பிட்டார். அமைதியாக தன்னுடன் இருந்து, அளவில்லாத அக்கறையுடன் துணைநின்றதாகவும், தான் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகளை தைரியமாக சமாளிக்க தேவையான மனஉறுதியை சூர்யா வழங்கியதாகவும் கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் படம் வெளியாக வேண்டியிருந்தாலும், சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை என்றும், இருப்பினும் தற்போது கிடைத்துள்ள இந்த வெளியீட்டு தேதியை விட சிறந்த தேதி எங்களுக்குக் கிடைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த விழாவில் ‘ஜனநாயகன்’ படம் வர முடியாதது வருத்தமளிப்பதாக கூறினார்.
மேலும், ‘வா வாத்தியார்’ படம் மிகவும் மகிழ்ச்சியான படமாக உருவாகியுள்ளதாகவும், குழந்தைகளுடன் குடும்பம் முழுவதும் வந்து ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் கூறினார். படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் எனவும், கண்ணன் ரவி தங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவரது படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, எதிர்பாராத விதமாக இரு படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் சூழல் அமைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
