எதிர்பார்ப்பை எகிற வைத்த ஆலியா பட்டின் ‘ஆல்பா’ பட டீஸர்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ஆலியா பட், தற்போது இயக்குநர் ஷிவ் ராவில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்து வரும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கியுள்ளது. அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இந்த திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல்வேறு யுனிவர்ஸ் திரைப்படங்களை உருவாக்கி வந்த யாஷ் ராஜ் பிலிம்ஸ், முதல் முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘ஆல்பா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆலியா பட்டுடன் இணைந்து பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வலுவான நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலில் ‘ஆல்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி, பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியான இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஆலியா பட்டின் ஆக்‌ஷன் தோற்றம், அவரது திரை வெளிப்பாடு மற்றும் படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. டீசர் வெளியீட்டின் மூலம் ‘ஆல்பா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading