2016ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துத் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தெறி. இந்த படம் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
தெறி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இந்த வெற்றி படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளார். அதன்படி பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 15ஆம் தேதி தெறி படம் ரீரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் சிக்கல்களால் படம் திரைக்கு வராத சூழலில், தெறி ரீரிலீஸ் செய்தி விஜய் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. அதேசமயம் விஜய் நடித்த மெர்சல் திரைப்படமும் சில இடங்களில் இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
