விமர்சனங்கள் என்னை பல இரவுகள் தூங்க விடவில்லை – நடிகர் விஜய் தேவரகொண்டா!

தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களுக்கிடையிலான மோதல்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன. அங்கு முன்னணி நடிகர்களின் ரசிகர் குழுக்களுக்குள் ஏற்படும் கடுமையான மோதல்கள், சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர்களாக வெளிப்படுகின்றன.  இந்த சூழலில், தங்களது திரைப்படத்திற்கு போட்டி நடிகர்களின் ரசிகர்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதிய நடிகர் சிரஞ்சீவியின் மன சங்கர வரபிரசாத் காரு படக்குழு, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் ‘ரேட்டிங்’ அளிப்பதைத் தடுக்க நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது. இதனால், அந்தப் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரேட்டிங் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகர் சிரஞ்சீவிக்கு ஆதரவாக எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அவர் நடித்த லிகர் படம் வெளியான போது, சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தாக்கப்பட்ட அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த பதிவில் விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது, இதைப் பார்த்தபோது ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது. பலரின் கடின உழைப்பு, கனவுகள் மற்றும் முதலீடு ஒரு வகையில் பாதுகாக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி. ஆனால், இதற்கெல்லாம் காரணமாக நம்முடைய சொந்த மக்களே இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ‘வாழவும் வாழ விடவும்’ என்ற எண்ணம் எங்கே போனது? ஒன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் என்ன ஆனது?

டியர் காம்ரேட் காலத்திலிருந்தே, திட்டமிட்ட அமைப்புசார் தாக்குதல்களின் அரசியலை நான் முதன்முறையாக உணரத் தொடங்கினேன். இந்த ஆண்டுகளில், என் குரல் பலரின் காதுகளில் விழுந்தது. ‘ஒரு நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது’ என்பதே எனக்கு சொல்லப்பட்டது. ஆனால், என்னுடன் படம் எடுக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் இயக்குநரும், விரைவில் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர ஆரம்பிக்கிறார்கள். பல இரவுகளை தூங்காமல் கழித்து, இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தும் மனிதர்கள் யார், அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், என் கனவுகளையும், என்னைப் போல வரும் மற்றும் எனக்குப் பிறகு வரும் பலரின் கனவுகளையும் எப்படி பாதுகாக்கலாம் என்பதையும் பற்றி சிந்தித்திருக்கிறேன்.

இப்போது இந்த பிரச்னை வெளிச்சத்திற்கு வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. மேலும், மெகா ஸ்டார் போன்ற பெரிய மற்றும் சக்திவாய்ந்த நடிகர் நடித்த படங்களுக்கே இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருப்பதை நீதிமன்றம் கவனித்திருப்பது முக்கியமானது. இது பிரச்னையை முழுமையாக தீர்க்காது என்றாலும், கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் குறைந்துள்ளது. தற்போதைக்கு #MSG மற்றும் அனைத்து சங்கராந்தி படங்களும் விடுமுறை காலத்தில் அனைவரையும் மகிழ்வித்து, வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading