நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த சந்தானம் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உருவானது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் கடந்த சுமார் 9 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், “பொறுத்தது போதும், பொங்கி எழு” என்ற நகைச்சுவை வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் பொங்கல் பண்டிகையை குறிப்பதாக அமைந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
