2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் வரக்கூடிய முதல் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தாலும், ஜெயம் ரவி மற்றும் அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியானாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
‘பராசக்தி’ திரைப்படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறுகையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் ‘பராசக்தி’ படத்தின் கதையையும், அதில் எனது கதாபாத்திரத்தின் தன்மையையும் முதலில் எனக்கு விளக்கினார். என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை வழங்கியதற்கு அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். ரவி மோகன் என்னுடைய நீண்ட கால இன்ஸ்பிரேஷன். திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் தற்போது சிவகார்த்திகேயன் என் சகோதரரைப் போல உள்ளார்.
சினிமாவில் அவருடைய வளர்ச்சியை நான் எப்போதும் வியப்புடன் கவனித்து வந்துள்ளேன். அவர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகுந்த கவனத்துடன் இருக்கும். அவரின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பார்த்து பல நேரங்களில் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. இந்த படம் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
