விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி… வைரலாகும் பழைய ட்வீட்!

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வரும் நிலையில், இதற்கு எதிராக பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த காலத்தில் ‘மெர்சல்’ திரைப்பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் நாளை வெளியாகவிருந்த சூழலில், இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், தயாரிப்பு நிறுவனம் படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை காலை வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை கண்டித்து, ராகுல் காந்தி வெளியிட்டிருந்த ட்வீட்டை மீண்டும் பகிர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவின் சக்கரவர்த்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. ‘மெர்சல்’ பட விவகாரத்தில் தலையிட்டு, தமிழின் தன்மானத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை மீண்டும் பகிர்ந்த பிரவின் சக்கரவர்த்தி, “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் சினிமாவை ஒடுக்குவது என்பது தமிழ் கலாச்சாரத்தையும் அதன் பெருமையையும் அவமதிப்பதாகும் என்று ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தற்போது, நரேந்திர மோடி மீண்டும் தமிழ் மக்களை அவமதிக்கும் விதமாக, ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை வேண்டுமென்றே தடுத்து வைத்து, அதன் வெளியீட்டை நிறுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading