கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.ஜி.எப் படத்தின் மூலம் உலகளவில் கவனம் பெற்ற நடிகர் யஷ், ‘டாக்சிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘டாக்சிக்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப் படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று யஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘டாக்சிக்’ படத்தில் ‘ரயா’ என்ற கதாபாத்திரத்தில் யஷ் நடித்துள்ளதாக, அவரது அறிமுக வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிமுக வீடியோ, ஹாலிவுட் படமான ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ ஸ்டைலை ஒத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சியமைப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
